புதிய தென்றல்

Friday, October 20, 2006

உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்

உள்ளாட்சி தேர்தல் வார்டுகளில் நேற்று(19/10/2006) மாலை 7 மணி நிலவரபடி அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி நிலவரம்.

Wednesday, October 04, 2006

இட ஒதுக்கீடு - காலத்தின் கட்டாயம்.

இட ஒதுக்கீடு என்றதும் ஒரு நகர்புறங்களிலேய படித்து, நகர்த்திலேயே வாழும் ஒரு சராசரி இளைஞனை போல் நானும் இட ஒதுக்கீட்டை, அதன் அவசியம் கருதாமல் எதிர்த்து வந்தேன். ஆனால், நான் பெரும் மதிப்பு வைத்துள்ள மூன்று தலைவர்களான ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், புரட்சிபுயல் வைகோ, என அனைவருமே இட ஒதுக்கீடு தேவை என்ற கருத்தை கொண்டுள்ளது என்னை சற்று சிந்திக்க வைத்தது.

இதில் அப்துல் கலாம், தன்னை சந்திக்க வந்த மாணவர்களை, சமாதானப் படுத்தி அனுப்பி வைத்ததோடு, அரசியல் சாயம் பூசாதபடி பட்டும் படாமலும் பேசி, தன் நிலையை வெளிபடுத்திவிட்டார். மன்மோகன் சிங்கும் தன் பங்கிற்கு தன்னை சந்தித்த மாணவரை சமதானம் செய்துவிட்டு, நேரடியாகவே பலமுறை ஆதரித்து பேசிவிட்டார். வைகோ அவர்கள், இட ஒதுகீட்டை ஆதரித்து மனித சங்கிலி பேரணி நடத்தி தன் ஆதரவை வெளிபடுத்திவிட்டார். இதை தவிர உச்ச நீதிமன்றமும் டில்லி நீதிமன்றமும் தன் பங்கிற்கு, இடஒதுகீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து தன் நிலையை வெளிபடுத்தியுள்ளது.



இவை அனைத்துமே, என் நிலை சரிதானா என்ற கேள்வி என் மனதில் எழுப்பியது. இந்நிலையில் தான் ஆனந்த விகடனில் வந்த இந்த கட்டுரை, என் நிலைபாடு தவறு என்று என்னை திருத்தியது.
---
ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?


பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருவதை எதிர்த்து, 16 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தீக்குளிப்புப் போராட்டம் நடந்தது. இப்போது அதே பிரச்னையில், மறுபடியும் போராட்டம்!

நோயாளிகளின் வேதனைகளை லட்சியமே செய்யாமல், மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நடக்கிறது. ‘இட ஒதுக்கீடு வந்துவிட்டால், நாங்கள் தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழியில்லை’ என்று சில மாணவர்கள் தற்கொலைக்கு அனுமதி கேட்டு, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள்.

மண்டல்கமிஷன் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் ஆட்சி, 16 வருடங்களுக்கு முன்மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அறிவித்த போது, அதன் விளைவாக அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது. இப்போது கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீட்டை அறிவிப்பதால், மன்மோகன் சிங் ஆட்சிக்கும் ஆபத்து வருமா?

ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள, ஒரு கேள்வி-பதில் தொகுப்பு இதோ:

இட ஒதுக்கீடு பழைய விஷயம்தானே? ஏன் இந்தப் புது எதிர்ப்பு?

பழைய விஷயம்தான். 1921-லேயே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு உத்தரவு போடப்பட்டாயிற்று. 1950-க்குப் பின், சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்காகத்தான் செய்யப்பட்டது. இப்போது எதிர்ப்புக்குக் காரணம், மத்திய அரசில் கல்வி நிலையங்களுக்கு அட்மிஷனில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு முதல் முறையாக அறிவிக்கப்படுகிறது என்பதுதான்.

இதுவரை இருந்துவந்த இட ஒதுக்கீடு என்பது என்ன?

மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. 1990-ல் வி.பி.சிங் ஆட்சியின்போதுதான், மண்டல் குழு அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இப்போது, கல்வி நிலைய அட்மிஷனிலும் அதே போன்ற இட ஒதுக்கீடு (அதே மண்டல் குழுவின் பழைய பரிந்துரையின்படி... ஆனால், தாமதமாக) அறிவிக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடுகளை மாநில அரசுகள் இதற்கு முன்பே செய்திருக்கின்றன அல்லவா?

ஆம். தமிழ்நாடு உட்பட, பல மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடுகள் இருந்துவருகின்றன. மத்திய அரசில் தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமே இருந்து வந்தது. அதைப் பிற்படுத்தப்பட்ட வருக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் 1990-க்குப் பிறகே எடுக்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால், என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்?

தகுதி, திறமை இல்லாதவர்கள் டாக்டராகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்குத் தென்னிந்தியாவே சாட்சி!

கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள். வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள் / இன்ஜினீயர்களைவிட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல, ஒரு சாட்சியமும் கிடையாது. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகள் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்!

யாருக்கெல்லாம் தகுதியும், திறமையும் உண்டோ, அவர்கள் எல்லோருமே படிக்கட்டுமே! எதற்காக இட ஒதுக்கீடு?

எந்தப் படிப்பையும் படிக்க விரும்புகிற எல்லாருக்கும் வாய்ப்பு தர வேண்டும்தான். ஆனால், அதற்கான கல்லூரிகள், இட வசதி, இதர ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை எனத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

சரி, ஏன் சாதி அடிப்படையில் முன்னுரிமை தர வேண்டும்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால், இதுவும் தேவைப்பட்டிராது. சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு நிலவிவரும் சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில்தான் சலுகை தரப்பட்டாக வேண்டும்.

ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது? எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்?

பொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு வரும் போது மட்டும் எழுப்புபவர்கள், ஏற்கெனவே பணக்காரர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவே இல்லை என்று யோசியுங்கள்.

புரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது?

தனியார் பொறியியல், மருத்துவ, இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்ற ஏற்பாடு இருக்கிறதே, அது என்னவாம்? பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கான இட ஒதுக்கீடுதானே? தவிர, ஐ.ஐ.எம் போன்ற உயர்மட்ட நிர்வாக இயல் கல்வி நிலையங்களில், கட்டணத்தைக் குறைக்கக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது. அதற்கு என்ன அர்த்தம்? பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்க வரும் நிலை தொடர வேண்டும் என்பதுதானே?

இட ஒதுக்கீடு கொடுத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் போதுமான இடங்களை நிரப்பவில்லையே?

அடிப்படைக் கல்வியில் வெவ்வேறு தரங்கள் இருப்பது முதல் காரணம். ஆட்கள் இருந்தும் நிரப்பாமல், அந்த இடங்களைப் பிற சாதியினர் எடுத்துக்கொள்ள வசதியாக, ஆளில்லை என்று கணக்குக் காட்டியது இன்னொரு காரணம்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் கோளாறுகளே இல்லையா? இன்னும் எத்தனைக் காலத்துக்கு இது இப்படியே நீடிக்க வேண்டும்?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டுதான். பிற்படுத்தப்பட்ட சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் முதல் தலைமுறையாகக் குடும்பத்தில் படிக்க வருபவருக்கும், அந்தந்த சாதிக்குள் இருக்கும் ஏழைக்கும் முன்னுரிமை தேவைப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்னைகள் சாதி அடிப்படையை நீக்குவதால் தீரக்கூடியவை அல்ல. சாதி அடிப்படை ஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டு, அதில் மேலும் என்ன சீர்திருத்தம் தேவை என்று யோசிப்பதே நியாயமானது.

எல்லா சாதிகளுக்கும் சமமான தரத்தில் கல்வி உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் வரை, இட ஒதுக்கீடு நீடிக்கத்தான் வேண்டும்.

அப்படியானால் உயர் சாதியில் இருக்கும் ஏழைகளின் நிலை என்ன?

பொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோ ருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங் போன்றவர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத் தாழ்வைச் சரிசெய்ய வந்ததே தவிர, வர்க்க வேறுபாட்டைச் சரிசெய்ய அல்ல. அதற்கு இன்னொரு திட்டம் தேவை.

இந்த நியாயங்கள் ஏன் வட இந்தியாவில் உணரப்படவில்லை?

அது 60 வருடங்கள் பின்தங்கி இருப்பதுதான் காரணம். இங்கே நடந்ததுபோல, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சமூக நீதிப் போராட்டம் எதுவும் அங்கே இதுவரை நடக்கவில்லை. அதுதான் காரணம். இன்னொரு காரணம்... வடக்கே உயர் சாதியினரின் சதவிகிதம், தெற்கு அளவுக்கு 5%க்குக் கீழே இல்லை. சுமார் 10 சதவிகிதம் வரை இருப்பதால், அந்தச் சாதி இளைஞர்களின் எண்ணிக்கை, கவலைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

இந்தப் பிரச்னை ஓயுமா, ஓயாதா?

ஓயாது. தனியார் துறையிலும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கோரி அடுத்த போராட்டம் வரப்போகிறது. அதைத் தடுப்பதற்காகவே இப்போதைய இட ஒதுக்கீடு எதிர்ப்பு, ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்தப் பரபரப்பில், டெல்லியில் எதிர்ப்பு இளைஞர்களையும், பீ†¡ரில் இட ஒதுக்கீடு ஆதரவு இளைஞர்களையும் ‘பாரபட்சம்’ இன்றி அடித்து நொறுக்கிய போலீஸாரை யாரும் கடுமையாகக் கண்டிக்காமல் விட்டு விட்டார்கள். நாம் கண்டிக்கிறோம்.

(ஆனந்தவிகடன் - 4-6-2006)


---

பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தங்கள் ஜாதி மக்களை கவர இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதும், பிராமணர்கள் சங்கம், லோக் பரித்திரினா போன்ற உயர் ஜாதி மக்களை கொண்ட கட்சிகள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஆர்பாட்டங்கள் நடத்தும் வேளையில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த பக்கமும் சாயாமல், சமயோஜிதமாக காய் நகர்த்துகின்றன.

வைகோவும் ஜாதியை வைத்து அரசியல் செய்பவர் என்ற குற்றம் சொன்னவர் முகத்தில் கரி பூசும்படி, உயர் சாதியை சேர்ந்த வைகோ, தன் சாதி மக்களின் எதிர்ப்பிற்கிடையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து குறல் கொடுப்பது வரவேற்க தக்கது.

இட ஒதுகீடு மசோதாவில் தங்கள் நிலைபாடு என்ன என்று தெளிவாக வெளிபடுத்தாமல் போக்கு காட்டும் தி.மு.க, பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் பற்றிய ஒரு நகைசுவை கேளிசித்திரம் (ஆங்கிலத்தில்).