Tuesday, January 02, 2007

அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ!

அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ! நல்ல பண்புகளை மரபுகளை நிலை நாட்டுபவர்!
மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ்.

“பாராட்ட வேண்டியவர்களை நாட்டுமக்கள் உரியநேரத்தில் பாராட்ட வேண்டும். அதன் பொருட்டுத்தான் வைகோவைப் பாராட்ட நான் இங்கே வந்திருக்கிறேன்” என சென்னையில் 11.12.2006 அன்று நடைபெற்ற “பாரதி - 125” விழாவில் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.இராகவன் ஐ.ஏ.எஸ். பேசும்போது குறிப்பிட்டார்.

அதன் விவரம் வருமாறு:

எப்போது இந்தக் கூட்டம் நடக்கப்போகின்றது என்று ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் நான் இருந்தேன். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு நான் என்னுடைய பெருமதிப்பைத் தெரிவிப்பது என்பதை ஒரு கடமையாகக் கருதுகிறேன். எனக்கு 79 வயது ஆகின்றது. யாரையும் பொய்யாகப் புகழவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் வாழ்ந்த காலத்தில் நேருவிடம் இருந்து ஆரம்பித்து பலதரப் பட்ட கட்சி அரசியல் வாதிகளுடன் பழகியிருக்கின்றேன். நான் சேவையில் சேர்ந்த காலம் 1951. இந்தியா குடியரசாகி ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. அப்படி நான் பார்த்துப் பழகியவர்களில் நேரு, பி.சி.ராய், பட்டேல், ராஜேந்திரபிரசாத் இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு அரசியல் கலாச்சாரத்திற்கு புதுமெருகு கொடுத்து அதற்கு வேண்டிய நல்ல பண்புகளையும், மரபுகளையும் இன்று நிலைநாட்டிக் கொண்டு இருப்பவர் வைகோ என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

இப்பொழுது இங்கு சொன்னார்கள், பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்ட வேண்டும் என்று. எந்த நாட்டு மக்களுக்குப் பாராட்ட வேண்டியவர் களைப் பாராட்டத்தெரியவில்லையோ அந்த நாடு உருப்படாது. அந்த அடிப்படையில் தான், நான் வைகோவின் பொதுச்சேவை, அவருடைய தரம் இவற்றைப் பாராட்டுகிறேன். உயர்ந்த நடத்தை, முக்கியமாக பாரதியாருடைய தனிச் சிறப்புக் குணம் அவரிடம் இருக்கிறது அதைச் சொல்லவேண்டும். அது என்ன வென்றால் பொதுப் பிரச்சனையில் அல்லது பொதுவாழ்வுப் பிரச்சனை அல்லது அரசியல் பிரச்சனை என்று வரும்பொழுது தன்னுடைய கருத்தை அஞ்சாநெஞ்சத்துடன், சுதந்திரமாகச் சொல்வது. அந்த மரபும், பண்பும் இப்பொழுது நாட்டில் அற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது இப்பொழுது இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. ஏனென்று கேட்டால். கருத்தைச் சொல்வதற்கு சுதந்திரம் இருந்தாலும், கருத்துச் சொன்னபின் சுதந்திரம் இருக்கிறதா? என்று ஒரு பயம் இருக்கிறது இன்றைக்கு. அபூர்வப்பிறவி, அஞ்சா நெஞ்சம் படைத்தவர் வைகோ என்பதனால் அவருக்கு எனது மதிப்பைத் தெரிவிக்கவேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் அதை ஒரு பொது கடமையாகக் கருதுகிறேன், சாதாரணமாக நீங்கள் பார்க்கவேண்டும், என்போன்று நிர்வாகத்தில் இருந்தவர்கள், அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் துரத்தில் ஒதுங்கி நின்றுஎப்பொழுது பார்த்தாலும் அளவுக்கு மேலாக விமர்சனம் செய்துகொண்டு அப்படி இப்படி இந்த அரசியல்வாதிகள் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். அது வாழ்க்கையை வீணடிக்கும் வழக்கம். அறிவுஜீவிகள் என்பவர்கள், விவரம் தெரிந்தவர்கள் - அரசியல்வாதிகள் என்றைக்கு ஒரு நல்ல தரத்தை நிலை நாட்டுகிறார்களோ அவர்களைப் பாராட்டி அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். அவர்களது கடமை அது என்கின்ற ஒரு கருத்தில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.


இரண்டாவது காரணம் கே.எஸ். இராதாகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழா கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவரை நான் பார்த்த அளவில் சொல்கிறேன் பண்பாளர். தன்வாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டிய தகுதி அவருக்கு இருக்கிறது. எழுத்திலும் அவருடைய புத்தகங்களை நான் படித்தேன். எழுத்திலும் வல்லமையுடன் எழுதுகிறார். கருத்திலும் தெளிவாக இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் உண்மை ஒளி இருக்கின்றது. ஆகையினால் எழுத்தில் அந்த ஒளிவருகின்றது. அவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்ப்பற்று நமக்கு வேண்டும், ஒரு கதை சொல்லுகின்றேன். மூன்று முறை united nation commision தலைவனாக இருந்தேன். ஐக்கிய நாடுகளில் ஐந்து அதிகாரபூர்வமான மொழிகள் உண்டு. எல்லா காகிதங்களும், மசோதாக்களும் அந்த ஐந்து மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டு உறுப்பினர்களுக்குத் தரப்படவேண்டும். 180 உறுப்பினர்கள் இருப்பார்கள், ரஷ்யனுக்கு ரஷ்யனில் தரவேண்டும், சைனாக்காரனுக்கு சீன மொழியில் தர வேண்டும் என்றெல்லாம் ஐந்து அதிகார மொழிகள். நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியும். பிரெஞ்சு என்னுடைய நண்பர் அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். நன்றாக ஆங்கிலம் பேசுவார் அதேமாதிரி ஒரு சீனரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், ரஷ்யரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், சில சமயங்களில் அந்த மொழிபெயர்ப்பு வருவதற்கு இரண்டு நிமிடம் தாமதமாகும், வந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் வந்துவிடும் சீனம், பிரெஞ்ச் எல்லாம் வருவதற்கு சிறிதுநேரம் ஆகும். அப்பொழுது நான் சொல்வேன் அந்த நண்பரிடம் லடிரச நஒஉநடநௌல இன்னொரு இரண்டு நிமிடத்தில் வந்துவிடும் உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, கூட்டத்தை ஆரம்பிக்கலாமே! அதில் உங்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லையே என்று சொல்வேன்.


என்னுடைய தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு என் கைக்கு கிடைக்கும் வரை நீங்கள் இந்தக் கூட்டத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கக்கூடாது என்று எனக்கு தகவல் சொல்லப்படும். அப்படிப்பட்ட தன்னுடைய சொந்த மொழியைப் பற்றிய ஒரு கர்வம் மற்றவர்களுக்கு இருக்கிறது. அந்த கர்வம் நமக்கு இல்லை. அந்தத் தமிழ்பற்று பாரதி சொன்ன தமிழ்பற்று வாழ்க! தமிழ் மொழி! வாழ்க! தமிழ்மொழி!, வாழ்க! தமிழ்மொழி! என்று அந்தப் பாட்டை நீங்களும் பாருங்கள். அப்படி பாடியவன் நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அந்த தமிழ்பற்றில் அந்த அளவிற்கு நாம் தேறவில்லை.


பெண்ணிற்கு 33 பங்கு உரிமைதருவதற்காக 12 ஆண்டு கள், 15 ஆண்டுகள் நாம் நாடாளுமன்றத்தில் தவித்துக்கொண்டிருக்கிறோம், எந்த நாட்டில் பெண்மை வாழ்க என்று பெண்கள் பற்றி அவர்களுடைய உயர்ந்த தரத்தைப் பற்றி பாரதி பாடினானோ. அந்த இந்திய நாட்டில் பெண்களுக்குத் தரவேண்டிய உரிமையைத் தருவதற்காக இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், இன்றுவரை அது முடிய வில்லை.


பாரதி சொன்ன தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மறுபடியும் மறுபடியும் நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வில், நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். வைகோவின் மூலமாக அரசியலில் இன்னும்பல முன்னேற்றங்கள் வர வேண்டும், அவர்மூலம் இன்னும்பல மாற்றங்கள் வந்து அரசியல் மணம்கமழ்ந்து இந்த நாட்டிற்கு ஒரு முன்னோடியாக அவர் திகழட்டும். மக்கள் எல்லோருக்கும் நலன்விளையட்டும்.

இவ்வாறு பி.எஸ். இராகவன் உரை ஆற்றினார்.

செய்தி: சங்கொலி-1, சங்கொலி-2

0 Comments:

Post a Comment

<< Home