Monday, January 01, 2007

மீண்டும் ஓர் பல்டி!

கலைஞர் கருணாநிதி மீண்டும் ஒரு முறை பல்டி அடித்துள்ளார். சில நாட்கள் முன்பு, திரை அரங்குகளின் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு, அதை பெறு அளவில் விளம்பரமும் செய்தி விட்டு, புதிய கட்டணத்தை அமல் படுத்த வெறும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் கட்டணத்தை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின் படி, திறை அரங்குகளின் கட்டணத்தை, முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகரிக்க திரை அரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய எனது முந்தைய பதிவு - திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு

இதை பற்றி தினமலரில் வெளியான ஓர் அலசல்:


கண்துடைப்பு! * தியேட்டர்களில் மீண்டும் அதே நிலையில் டிக்கெட் கட்டணம் * கட்டண குறைப்பு அறிவிப்பு உத்தரவை மாற்றியது அரசு

சினிமா தியேட்டர்களில் கட்டணங்களை குறைத்து நிர்ணயித்த தமிழக அரசு மீண்டும் அவற்றை பெருமளவு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதன் மூலம், சமீபத்தில் அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் மாற்றப்பட்டு, டிக்கெட் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது.

எந்த தியேட்டரிலும் கட்டணங்கள் குறையப் போவதில்லை; மாறாக, உயரவே அரசு வழிவகை செய்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவியேற்ற பின் திரைப்படத் துறைக்கு பல சலுகைகளை அறிவித்தது. படப்பிடிப்புகளுக்கான கட்டணம் குறைப்பு, கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து ஆகிய அறிவிப்புகள் திரைப்படத் துறையினரின் பெரும் ஆதரவை பெற்றன. திரைப்படத் துறையினரும் முதல்வர் கருணாநிதியை வெகுவாக புகழ்ந்தனர். கேளிக்கை வரியை குறைத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பலன் அடைந்தனர். ஆனால், டிக்கெட் விலையை அவர்கள் குறைத்துக் கொள்ள தயாராக இல்லை; திரைப்படத் துறையிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் அதிகளவு மக்கள் படம் பார்க்க வருவர் என்ற நம்பிக்கையிலும், திருட்டு 'வி.சி.டி.,' புழக்கத்தை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கையிலும் கட்டணங்களை குறைக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் அரசை கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று தியேட்டர்களுக்கான கட்டணத்தை குறைத்து அரசு நிர்ணயம் செய்தது.

மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. இதேபோல, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏ.சி., வசதி மற்றும் ஏ.சி., வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டன. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள சில பெரிய தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அதிருப்தி அடைந்தனர். அரசு அறிவித்த புதிய கட்டண முறை ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், திடீரென 31ம் தேதி இரவு புதிய உத்தரவை அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை பாதிக்காத வகையில் சில நிபந்தனைகளுடன் தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதாக அரசு தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவால் மக்களுக்கு தான் பெரும் பாதிப்பு. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு போன்றவற்றால் பெரும் லாபம் சம்பாதித்து வரும் தியேட்டர் அதிபர்கள், பார்க்கிங் கட்டணம், கேன்டீன் வசதி போன்றவை மூலம் கூடுதலாக லாபமடைந்து வருகின்றனர். தற்போது அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுப்படி, ஒரே வளாகத்தில் இரண்டுக்கும் அதிகமான ஏ.சி., வசதியுள்ள தியேட்டர்கள் மற்றும் அவை அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 800 இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இது போன்ற தியேட்டர் வளாகங்களில் 800க்கும் அதிகமான இருக்கைகளெ இப்போதும் இருக்கின்றன. இந்த நிபந்தனை எந்த தியேட்டரையும் கட்டுப்படுத்த போவதில்லை. இதுதவிர, இருக்கை வசதிகள், டிஜிட்டல் ஒலி வசதி, ஜெனரேட்டர் போன்றவை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்துமே கண்துடைப்பு வேலை தான். இந்த நிபந்தனைகள் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்ளவே வழி வகுக்கும்.

ஆனால், முதலில் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச கட்டணம் தற்போது 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கூடுதல் பொழுதுபோக்கு வசதி, குளிர்சாதன வசதியுடன் உணவு நிலையம் போன்றவை உள்ள தியேட்டர்கள் அதிகபட்சமாக ரூ.120 கட்டணம் வசூலிக்க அரசு அனுமதித்துள்ளது. தியேட்டர் வளாகங்களில் உள்ள பொழுதுபோக்கு வசதிகளை பயன்படுத்த தனியாக கட்டணம் வசூலித்து விடுகின்றனர். அதேபோல, உணவகங்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, இதை ஒரு பெரிய வசதியாக கூறி சலுகை அளிப்பது தியேட்டர் அதிபர்கள் லாபம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக தான். தற்போது அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களால், எந்த ஒரு தியேட்டரிலும் விலை குறையப் போவதில்லை. மாறாக, இதற்கு முன்பு இருந்ததை விட உயரத் தான் போகிறது. மாநகர பகுதிகளில் உள்ள தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்திருந்தால், ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை விட 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ள அரசு அனுமதித்து இருக்கலாம். ஆனால், இரண்டு மடங்கு கட்டணம் அதிகரிக்க அனுமதித்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் புதிய உத்தரவால், நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்க குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படி பொதுமக்கள் செலவழிக்கும் தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியும் இப்போது கிடையாது. அதை மீண்டும் அரசு வசூலித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.

நன்றி: தினமலர்



கட்டண உயர்வு பற்றிய செய்தி:


குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களின் கட்டணத்தை மாற்றி அமைத்தது தமிழக அரசு

சென்னை : குளிர் சாதன வசதிகள் கொண்ட மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களின் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது தமிழக அரசு.தியேட்டர்களின் கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தியேட்டர்களின் புதிய கட்டண வீதத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், குளிர்சாதன வசதி கொண்ட, இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களுக்கு அதிகபட்ச கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

* இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்

*எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கும் குறைவில்லாத இருக்கைகள்

*இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல்

*இருக்கை வரிசைகளுக்கு இடையில் இடைவெளி 1050 மி.மீ.,(41.5 அங்குலம்)க்கு குறையாமல் இருத்தல்

*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்

*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி

*மூன்று பிரதான ஒலிபெருக்கிகள்

*மூன்று வழி ஒலி பெருக்கிகள்

*சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை

*தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி

*குளிர்சாதன வெளிக்கூடம்

*கணினி மற்றும் இணைய தள டிக்கெட் முறை

* டிக்கெட்டுகளை வீடுகளுக்கு சென்று சேர்க்கும் முறை

மேற்குறிப்பிட்ட 15 வகையான வசதிகள் கொண்ட தியேட்டர்களில் உயர்ந்த பட்ச கட்டணமாக ரூ. 95ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10ம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

*இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்

* எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கு குறைவில்லாத இருக்கைகள்

*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்

*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி

*டிஜிட்டல் ஒலி அமைப்பு

மேற்கூறியவை கட்டாயமாக இருந்து தீர வேண்டியதுடன் முன்னர் கூறிய பட்டியலில் ஏதாவது ஐந்தை நிறைவு செய்யும் அமைப்புடைய தியேட்டர்களுக்கு உயர்ந்த பட்சமாக ரூ.85ம், குறைந்த பட்சம் ரூ.10ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

*கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும் உணவு நிலையத்தையும் குளிர் சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில் மூன்றுக்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தால் உயர்ந்த பட்ச கட்டணம் ரூ.120 , குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கலாம்.

*தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்த வெளி தியேட்டரான 'பிரார்த்தனா' வின் தனித்தன்மை கருதி அரசு ஏற்கனவே, நிர்ணயித்து தற்போது கார்களுக்கும், படம் காண்போருக்கும் நடைமுறையில் உள்ள கட்டண வீதங்களெ தொடர்ந்து நீடிக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினமலர்


தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்
ஜனவரி 01, 2007

சென்னை: தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வில் தமிழக அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. ஒரே வளாகத்தில் 2க்கும் மேல் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும், அவை அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்து கட்டணங்களை நிர்ணயித்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசு அண்மையில் குறைத்துள்ள தியேட்டர்களுக்கான புதிய கட்டண விகிதங்களை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவித்துள்ளதுடன், சிறப்பாக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வசதிகளுடன், குளிர்சாதன வசதிகளையும் கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடைய வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், தியேட்டர் வளாகங்களுக்கான கட்டணங்களை பின்வருமாறு திருத்தி முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மொத்தம் 3 விகிதங்களில் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் விகிதம்: 2 தியேட்டர்கள், அதற்கும் கூடுதலாக உள்ள, ஏசி வசதி உடைய தியேட்டர்கள், எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800க்கும் குறைவில்லாத எண்ணிக்கை உள்ள இருக்கைகள், இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல் இருத்தல்;

இருக்கை வரிசைகளுக்கு இடையிலா இடைவெளி 1050 மில்லி மீட்டர் குறையாமல் இருத்தல், நூறு சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலி அமைப்பு, மூன்று பிரதான ஒலிபெருக்கிகள், சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை, தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி, குளிர்சாதன வெளிக்கூடம், கம்ப்யூட்டர் டிக்கெட் முறை, இணையதள டிக்கெட் முறை, வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதி உடைய தியேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 95 டிக்கெட் கட்டணமாக இருக்கும்.

2வது விகிதம்: இரண்டுக்கும் அதற்கு அதிகமாக உள்ள தியேட்டர்கள், மொத்தம் 800க்கு குறைவில்லாத இருக்கைகள், நூறு சதவீத சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி மற்றும் முதல் வகையில் உள்ள 15ல் ஏதாவது ஐந்து வசதிகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்த பட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 85 ஆக டிக்கெட் இருக்கும்.

கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், உணவு நிலையத்தையும், குளிர்சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின் உயர்ந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 ஆகவும் இருக்கும்.

தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்தவெளி தியேட்டரான பிரார்த்தனாவில் தற்போது உள்ள நடைமுறைப்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி:thatstamil

0 Comments:

Post a Comment

<< Home