Monday, December 25, 2006

திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும்: வைகோ அறிவிப்பு

சென்னை: ""தி.மு.க.,வின் தூண்டுதலைக் கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. கருணாநிதியின் வஞ்சக வலையில் விழுந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் இருவருக்காகவும் அனுதாப்படுகிறேன்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.


சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மதியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது :

நானும், என் தொண்டர்களும் உருவாக்கிய இயக்கம் ம.தி.மு.க., தியாகத்தாலும், உழைப்பாலும் வளர்ந்த இந்த இயக்கத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி முயற்சித்து வருகிறார். இவர்களின் வஞ்சக வலையில் விழுந்துள்ள எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகிய இருவருக்காகவும் வேதனைப்படுகிறேன், அனுதாப்படுகிறேன். கடந்த ஐந்து மாத காலமாக எங்கள் இயக்கத்தை நிர்மூலமாக்க 10 பேர் விலகினாலும், 10 ஆயிரம் பேர் விலகி தி.மு.க.,வில் இணைந்தது போன்று பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

திட்டமிட்டபடி 25ம் தேதி(இன்று) தாயகத்தில் மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயலர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். அவைத் தலைவர் எல்.கணேசன், துணை பொது செயலர் செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். எனினும், அடிப்படை உறுப்பினர்களாக நீடிப்பர்.

தாயகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு தி.மு.க.,வின் குண்டர் படைகள் எங்கள் கட்சியின் கரைவேட்டிகளுடன் நுழைந்து கலவரம் செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. தாயகத்திற்கு தொண்டர்கள் வரும் போது கலவரம் செய்ய வருகிறார்கள் என்று தடுத்துவிட்டு, கேடிகளையும், போக்கிரிகளை வைத்து கூட்டத்தை சீர்குலைக்க முடிவு செய்துள்ளனர்.

இவர்களின் ஆராஜகத்தை பற்றி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளென். தி.மு.க.,வில் நீண்டகால நல்ல தொண்டர்கள், பொறுப்புள்ள உறுப்பினர்களுக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். உங்களுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். நான் பயத்தினால் சொல்லவில்லை, அன்பினாலும், கடந்த கால பாசத்தினாலும் சொல்கிறேன். 13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் நாங்கள் கட்டுக்கோப்போடு ராணுவத்திற்கும் மேலாக சிறு சச்சரவும் இல்லாமல் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.

எத்தனையோ நடைபயண்ம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்தியபோதும் எங்களால் யாருக்கும் சிறு கஷ்டமும் ஏற்படவில்லை என்பதை மக்கள் அறிவர். எனது தாயகம் ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி தொண்டர்கள் கொடுத்த ரூ.5, ரூ.10 நிதியால் கட்டப்பட்டது. அந்த தாயகத்தில் கலகம் செய்ய முயற்சிக்கும் கருணாநிதிக்கு ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

தாயகத்தில் எந்தவித சிறு அசம்பாவிதம் நடந்தாலோ, கலவரம் செய்ய முயன்றாலோ, எங்கள் கட்சி கரை வேட்டியுடன் உள்ளெ நுழைந்து வன்முறையில் ஈடுபட்டால் அதை நாங்கள் அறவழியில் சந்திப்போம். மாநகராட்சி தேர்தலில் நடந்த ஜனநாயக படுகொலையை போல இப்போதும் காவல் துறையின் துணையோடு கூட்டத்தை தடுக்க திட்டம் தீட்டி வருகின்றனர். இதை எல்லாம் பார்த்து நாங்கள் பயந்து விட மாட்டோம். எங்களுக்கு பின்னால் லட்சக்கண்க்கான உண்மை தொண்டர்கள் உள்ளனர்.

இவ்வாறு வைகோ கூறினார்.

அப்போது துணை பொது செயலர் சத்யா, சீமாபஷீர், வடசென்னை மாவட்ட துணை பொது செயலர் ஏசுராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.,வினரிடம் பேரம் நடத்தும் தி.மு.க.,

வைகோ கூறுகையில், ""தமிழகத்தில் உள்ள மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் வீட்டிற்கு மாவட்ட அமைச்சர்கள், தி.மு.க., மாவட்ட செயலர்கள் சென்று எத்தனை லட்சம் வேண்டும், எந்த கான்ட்ராக்ட் வேண்டும், நாங்கள் தருகிறோம், நீங்கள் சேலத்தில் நடக்கும் எல்.கணேசன் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று பேரத்தை துவக்கியுள்ளனர். கட்டுக்கோப்பான ம.தி.மு.க.,வினர் ஒருபோதும் பேரத்துக்கு அடிபணிய மாட்டார்கள்,'' என்றார்.

செய்தி: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home